வெற்றிப் படிக்கட்டுகள்
தொடர் - 8
வெற்றிக்கான
தகவல் தொடர்புகள்...
தகவல் தொடர்புகள்...
அது ஒரு கம்ப்யூட்டர் நிறுவனம்.
பல சாப்ட்வேர்களை உருவாக்கி புகழ்பெற்ற நிறுவனமாக அது விளங்கியது.
புதிய மென்பொருள்களை உருவாக்கும் அதிகாரியாக பொறுப்பேற்றிருந்தார் ஆகாஷ். பொறியியல் துறையில் எம்.இ., முடித்து, மொபைல் டெக்னாலஜியில் சிறப்புப் பயிற்சிபெற்ற ஆகாஷ், அறிவில் சிறந்து விளங்கினார்.
“27 வயதில் இவருக்குள் இத்தனை ஆற்றலா?” என்று அனைவரும் ஆச்சரியமாக ஆகாஷைப் பார்த்தார்கள். பணியாளர்கள் பாராட்டினார்கள். அலுவலகமே ஆகாஷின் திறமையைக்கண்டு வியந்தது.
சுறுசுறுப்பான இயக்கம். மகிழ்வோடு மற்றவர்களிடம் பழகும் பழக்கம் - இவை அலுவலகத்தில் எளிதாக ஆகாஷ¨க்கு அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது.
குறிப்பிட்ட காலத்திற்குள் புராஜக்ட்டை (Project) வெற்றிகரமாக முடித்ததால், உயர் அதிகாரிகள் அழைத்துப் பாராட்டினார்கள். மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்தினார் ஆகாஷ். ஆனால், அந்த மகிழ்ச்சி 6 மாதத்திற்குள் அசூர வேகத்தில் விடை பெற்றது.
திடீரென ஒருநாள் மேலதிகாரி ஆகாஷை அழைத்தார்.
“நீங்கள் திறமைசாலியாக இருக்கலாம். ஆனால், மற்றவர்களோடு எப்படி பழக வேண்டும்? என்ற விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள்” என்று எச்சரிக்கை மணியடித்து அனுப்பினார்.
ஆகாஷ¨க்கு ஒன்றும் புரியவில்லை.
“நான் என்ன தவறு செய்தேன்?” என்று சிந்தித்துப் பார்த்தார். குழப்பமாக இருந்தது. ஒரு வாரம் முடிவதற்குள் மேலதிகாரி மீண்டும் அழைத்தார்.
“ஆகாஷ் உங்கள் பெர்பாமன்ஸ் அப்ரைசல் (Performance Appraisal) எதிர்பார்த்த அளவு அமையவில்லை. உங்கள் ‘கம்யூனிகேஷன் ஸ்கில்’ (Communication Skill) சரியாக இல்லை. கொஞ்சம் வளர்த்துக் கொள்ளுங்கள்” என்று நேரடியாகவே சொன்னார்.
ஆகாஷ் அதிர்ந்துபோனான்.
நுனிநாக்கில் தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் பேசும் ஆற்றல்பெற்ற ஆகாஷ¨க்கு உயர் அதிகாரியின் பேச்சு பேரிடியாக அமைந்தது.
“நான் என்ன தவறு செய்தேன்? ‘அலுவலகக் கோப்புகளை அழகாக கையாளுகிறேன்’ என்று கடந்த மாதம் சொன்னார்கள். ‘தொலைபேசி அழைப்புகளில் நிதானமாகவும், தெளிவாகவும் கையாளும் திறன் படைத்தவன்’ என்றும் பாராட்டினார்கள். ‘தகவல் தொடர்பில் வல்லவன்’ என்றார்கள். இப்போது ‘கம்யூனிகேஷன் ஸ்கில்’ தரமாக இல்லை என்கிறார்கள். என்னை கழற்றிவிட வழிபார்க்கிறார்களோ” என்ற அச்சம் அவருக்குள் உறைந்தது.
இந்தச் சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்குள் ஆகாஷின் கணக்கை முடித்து, “இன்றிலிருந்து வேலைக்கு வர வேண்டாம்” என்றுசொல்லி டிஸ்மிஸ் செய்தார்கள். ஆகாஷ¨க்கு ஒன்றும் புரியவில்லை.
“நிறுவனம் என்னை பழிவாங்கிவிட்டது” என்று மூத்த ஊழியரிடம் சொல்லிவிட்டு விடைபெற்றார். அவர்களில் ஒருவர் ஆகாஷை தனியாக அழைத்து, “நீங்கள் நமது போட்டியாளர் நிறுவனத்தில் சேரப் போகிறீர்களாமே? கேள்விப்பட்டேன். இது உண்மையா?” என்று கேள்வி கொக்கியை வீசினார்.
“இல்லையே! யார் சொன்னார்கள்?” என்று அதிர்ந்து கேட்டான் ஆகாஷ்.
“உங்கள் நம்பிக்கைக்குரிய நண்பர்தான் எங்களிடம் சொன்னார். இந்தத் தகவல் நிறுவனத்திற்குத் தெரிந்துவிட்டது. நீங்கள் போட்டி நிறுவனத்தின் ஒற்றனாக வந்து, உளவுப்பார்க்கிறீர்கள் என்று நிர்வாகம் நினைக்கிறது. அதன் விளைவாகத்தான் உங்களை டிஸ்மிஸ் செய்திருக்கிறது” என்று அணுகுண்டை தூக்கிப்போட்டார் மூத்த ஊழியர்.
“என்மீது அபாண்டமான பழியா? நான் என் நண்பன் பாக்கியநாதனிடம் தவறாக ஒன்றும் சொல்லவில்லை. ‘இவ்வளவு திறமைமிக்க நீங்கள் இந்த நிறுவனத்தில் இருக்க வேண்டுமா? நல்ல வேலை கிடைத்தால் போய்விடுங்கள்’ என்றார் அவர். நான் சரி கொஞ்சநாள் போகட்டும் பார்த்துக்கொள்வோம் என்றுதான் அவரிடம் சொன்னேன். அவர் இப்படி திரித்து சொல்லியிருப்பார் என நான் நினைக்கவில்லை” என்று ஆகாஷ் பதில் தந்தான்.
யாரிடம்? எப்படி? எப்போது பேச வேண்டும்? என்ற நுணுக்கம் தெரியாத ஆகாஷ், அவமானப்பட்டதோடு நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டது வேதனைக்குரிய செயல்தானே.
ஆகாஷ் தனது கம்யூனிகேஷன் திறனை ஒழுங்காகப் பராமரிக்கத் தவறியதால், இந்த நிலைக்குத் தள்ளப்பட்டார்.
“தகவல் தொடர்பு” என்பதில், ஒரு தகவலை ஒருவரிடமிருந்து மற்றவரிடம் பரிமாறிக்கொள்வதும்? அந்தத் தகவலை மற்றவர் சரியாகப் புரிந்துகொள்வதும் மிக முக்கியமானதாகும்.
ஒரு மனிதனுக்கு இரத்த ஓட்டம் எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு ஒரு அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியருக்கும், அதிகாரிக்கும் ‘தகவல் தொடர்பு’ (Communication) மிக முக்கியமானதாகும். ஒரு சிறந்த தகவல் தொடர்புதான் பணியிடத்தில் பணியாளர்கள் சிறந்த முறையில் பணி செய்ய உதவியாக அமைகிறது. நல்ல முடிவுகளை மேற்கொள்ளவும், மனிதர்களின் மனப்பாங்கை மாற்றவும், சமூகத்தோடு இணைந்து பழகவும் ‘தகவல் தொடர்பு’ மிக முக்கியக் கருவியாக பயன்படுகிறது.
ஒரு நிறுவனத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் “தகவல் தொடர்பு” பேரூதவி புரிகிறது. நிறுவனத்தின் கோட்பாடுகளையும், வழிகாட்டல்களையும் ஒரு பணியாளருக்குத் தெரிவிப்பதில் இது பெரும்பங்கு வகிக்கிறது. சரியான தகவல் தொடர்பு ஒரு நிறுவனத்தில் அமையும்போதுதான், நிறுவனத்தின் பிரச்சினைகள், பணியாளர்களுக்கான குறைகள் போன்றவைகள் மேலதிகாரிகளுக்கு சரியான நேரத்தில் தெரிவிக்க இயலும்.
நல்ல உறவுகளை பணியிடத்தில் வளர்ப்பதற்கு சிறந்த தகவல் தொடர்பு அவசியமாகிறது.
தகவல் தொடர்பு சரியில்லாத இடங்களில், பணியாளர்களுக்குள் விரக்தி ஏற்படும். ஒருவருக்கொருவர் தவறாகப் புரிந்துகொள்ளுதலும், தேவையற்ற எதிர்பார்ப்பும் அதிகமாகும்போது கருத்து வேறுபாடுகள் களம் இறங்கும். எனவே, பள்ளி-கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் தங்கள் தகவல் தொடர்புத் திறனை (Communication Skill) வளர்ப்பதில் அதிக அக்கறைக்காட்ட வேண்டும். அப்போதுதான் இளைஞர்களின் உலகம் இனிமை நிறைந்ததாக மாறும்.
தகவல் தொடர்பை வளர்க்க சில வழிகள்:
- மற்றவர்கள் சொல்வதை கூர்ந்து கவனியுங்கள்.
- கிடைத்தத் தகவலை சரியாகப் புரிந்துகொள்ள இயலாவிட்டால், மீண்டும் தகவல் அனுப்பியவரிடம் விளக்கம் கேளுங்கள்.
- தகவல்களைப் புரிந்துகொண்டாலும், “நீங்கள் சொன்னது இதுதானே” என்று கேட்டு அந்தத் தகவலை உறுதிப்படுத்திக் கொள்வது சிறந்தது.
- உணர்ச்சிப்பொங்க நிதானம் தவறும் நிலையில், உங்கள் தகவலை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ளாதீர்கள். சிலவேளைகளில் அது எதிர்மறையான விளைவுகளை உருவாக்கிவிடும்.
- அதிக இரைச்சல் உள்ள இடங்களில் உங்கள் பேச்சைக் குறைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் அந்த இரைச்சல் தகவல் பெறுபவரின் புரிந்துகொள்ளும் தன்மையில் (Understanding) சிக்கலை உருவாக்கும்.
- தகவல் அனுப்புவதற்கான சரியான ஊடகத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். அந்த ஊடகத்திற்கு ஏற்றவாறு தகவல்களை மாற்றி அனுப்ப பழகிக்கொள்ளுங்கள்.
- பேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர், இ-மெயில், கடிதம், செல்போன், எஸ்.எம்.எஸ்., என விதவிதமான வழிகளில் தகவல்களைப் பரிமாறும்போது மற்றவர்கள் தெளிவாக புரிந்துகொள்ளும்படி அவசியமான தகவல்களை இணைத்துக்கொள்ளுங்கள்.
- இடத்திற்கு ஏற்றாற்போல் பேசப் பழகிக்கொள்ளுங்கள்.
- நேரத்திற்கு தகுந்தாற்போல் தகவல்களின் தன்மையை மாற்றிக்கொள்ளுங்கள்.
- தகவல்களின் முக்கியத்துவத்தின் அடிப்படையில், தகவல் பரிமாற்றத்தை அமைத்துக் கொள்ளுங்கள்.
- நேரத்தை வீணடிக்கவும், தகவல்களைப் பெறுபவருக்கு எரிச்சலை உண்டாக்கவும் தகவல் தொடர்பைப் பயன்படுத்தாதீர்கள்.
தகவல் தொடர்பை சரியான முறையில் பயன்படுத்தினால், யார் வேண்டுமானாலும் எளிதில் வெற்றி பெறலாம். நிலைத்த புகழ் மகுடத்தைச் சூடி மகிழலாம்.
கருத்துரையிடுக