திருச்செந்தூர் முருகன் - மாசித் திருவிழா 2019 - நெல்லை கவிநேசன் சிறப்பு கட்டுரைத்தொடர் 4

திருச்செந்தூர் முருகன் மாசித் திருவிழா - 2019 
நெல்லை கவிநேசன் - சிறப்பு கட்டுரைத்தொடர்
 [Website:www.nellaikavinesan.com, Email: nellaikavinesan25@gmail.com]

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற மாசித் திருவிழா நான்காம் நாள் நிகழ்வுகள்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா 10.02.2019 முதல் 21.02.2019வரை 12 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித்திருவிழா நான்காம் நாளான புதன்கிழமை [13.02.2019] ன்று மேலைக்கோயிலில் இருந்து சுவாமி தங்கமுத்துக்கிடா வாகனத்திலும், அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி எட்டுத் திருவீதிகளிலும் உலா வந்து மேலைக்கோயில் சேர்தல். அதன்பின்னர், மேலைக்கோயிலில் இருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் திருவீதி உலா வந்து மேலைக்கோயில் சேர்தல்.



இதனை முன்னிட்டு “திருச்செந்தூர் முருகன்” என்னும் தலைப்பில் நெல்லை கவிநேசன் வழங்கும் சிறப்பு கட்டுரைத்தொடர் வெளியிடப்படுகிறது.  

திருச்செந்தூர் முருகன் மகிமைகள்
1. பகழிக் கூத்தர்
சதுர்வேத மங்கலம் என்ற இடத்தைச் சேர்ந்தவர் பகழிக் கூத்தர். வைணவரான இவர், தீராத வயிற்று வழியால் மிகவும் இடர்ப்பட்டார். முருகப்பெருமான் இவரது கனவில் தோன்றினார். தன்மீது ‘பிள்ளைத் தமிழ்’ பாடும்படி கட்டளையிட்டார்.

குழந்தை நிலையில் தெய்வங்களை வைத்து, குழந்தைப் பருவ நிலையில் நடைபெறும் நிகழ்ச்சிகளைப் புகழ்ந்து பாடுவது பிள்ளைத்தமிழ் ஆகும். திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் பாடிய பகழிக்கூத்தரின் வயிற்றுவலி நீங்கியது. ‘திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ்’ எனும் நூல் திருச்செந்தூர் முருகன் சன்னதியில் அரங்கேற்றப்பட்டது.

முருகப் பெருமானுக்கு விருப்பமான இந்த பிள்ளைத்தமிழ் நாள்தோறும் அபிஷேக நேரத்தில் திருப்புகழோடு சேர்த்து இன்றும் கோவிலில் பாடப்படுவது சிறப்பு அம்சமாகும்.

2. வடமலையப்பர்
ஒருமுறை டச்சுக்காரர்கள் திருநள்ளாறு என்னும் திருத்தலத்திற்குச் சென்று அங்குள்ள நடராஜர் விக்கிரகத்தை எடுத்துக்கொண்டு கப்பல்மூலம் கடல் வழியாகத் திருச்செந்தூர் வந்தனர். திருச்செந்தூர் கோவிலுக்கு வந்து சண்முகர் விக்கிரகத்தை எடுத்துக்கொண்டு தங்கள் நாட்டுக்குக் கப்பல்மூலம் செல்ல ஆரம்பித்தனர்.

அந்த நேரம் - மிகப்பெரிய அளவில் காற்று வீசியதால் கடல் கொந்தளித்தது. கடல் கொந்தளிப்பால் அவர்களால் மேலும் பயணம் செய்ய இயலவில்லை.

கப்பல் கடலில் மூழ்கும் அளவுக்கு ஆபத்து அதிகமானது. அப்போது கப்பலில் பயணம் செய்த ஒருவர் “நாம் இந்த திருச்செந்தூர் முருகப்பெருமானின் விக்கிரகத்தை திருடி எடுத்துக்கொண்டு வருவதால்தான் கடல் கொந்தளிக்கிறது. எனவே என்ன செய்ய வேண்டும்” - என பதட்டத்தோடு கேட்டார். பின்னர், கப்பலில் பயணம் செய்த அனைவரும் “இந்தச் சிலைகளை கடலில் போட்டுவிடுவோம்“ என்ற முடிவுக்கு வந்தனர்.

முதலில் நடராஜரை எடுத்து அந்தச் சிலைகளை அதை கயிற்றில் கட்டி இறக்கினார்கள். அப்போதும் கடல் கொந்தளிப்பு அடங்கவில்லை. பின்னர் முருகன் சிலையை எடுத்து கயிற்றினால் கட்டி கடலில் போட்டார்கள். அதன் பின்னரும் கொந்தளிப்பு தொடர்ந்து இருந்தது.

கப்பலில் பயணம் செய்த அனைவரும் பயந்து நடுங்கினார்கள். “இது தெய்வ குற்றம்....” என்று நினைத்து கப்பலின் பயணத்தை வேறு திசைக்கு மாற்றிக்கொண்டு சென்றுவிட்டனர்.

முருகன் விக்கிரகம் திருடப்பட்டுவிட்டது என்ற செய்தி அறிந்ததும் திருச்செந்தூர் நகரிலுள்ள அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள்.

இந்தநிலையில் செய்தி அறிந்த திருநெல்வேலியை ஆட்சி செய்த வடமலையப்ப பிள்ளை மனம் வருந்தினார். திருச்செந்தூரில் முருகன் சிலை இல்லை என்பதால் மனம் கலங்கி சாப்பிடாமல் பல நாட்கள் இருந்தார். மேலும் புதிதாக முருகன் விக்கிரகம் ஒன்றையும் செய்து அதனைத் திருச்செந்தூர் கோவிலில் வைக்கவும் ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார்.

அப்போது வடமலையப்ப பிள்ளையின் கனவில் முருகப் பெருமான் தோன்றினார்.

“என்மீது பக்தி கொண்ட வடமலையப்பரே... என்னைக் காணவில்லை என நீர் வருத்தப்பட வேண்டாம். நான் திருச்செந்தூர் கோவிலுக்குச் சற்று தொலைவில் கடலுக்குள்தான் உள்ளேன். நீர்... படகின்மூலம் கடலில் பயணம் செய்தால் கடலில் ஓர் எலுமிச்சம்பழம் மிதந்து கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அந்த இடத்தில் கடலுக்கடியில் நான் இருக்கிறேன். எலுமிச்சம்பழம் மிதக்கும் இடத்திற்குமேல் ஒரு கருடன் வட்டமிடும். அந்தக் கருடன் பறக்கும் இடத்தை வைத்தே நீர் என்னைக் கண்டுகொள்ளலாம்” - எனக் கூறினார்.

முருகப் பெருமான் தனது கனவில் கூறியவற்றை நினைவில் வைத்துக்கொண்டு வடமலையப்பர் சிறிய படகில் புறப்பட்டார். கடலில் முத்தெடுக்கும் திறன்கொண்டவர்களையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு புறப்பட்டார். முருகப் பெருமான் கூறியபடி கருடன் வானத்தில் வட்டமடித்தது. அந்தக் கருடன் பறக்கும் இடத்திற்குக் கீழே கடலில் ஒரு எலுமிச்சம்பழம் மிதந்தது.

எனவே, - அடையாளம் கண்டுகொண்ட வடமலையப்ப பிள்ளை உடன் வந்தவர்களை கடலில் மூழ்கி முருகப் பெருமான் விக்கிரகத்தை எடுத்துவரச் சொன்னார்.

கடலில் மூழ்கியவர்கள் கையில் முதலில் திருநள்ளாறு நடராஜர் விக்கிரகம் கிடைத்தது. ஆனால் முருகப்பெருமான் விக்கிரகம் கிடைக்கவில்லை.

வடமலையப்பப் பிள்ளை மிகவும் மனம் வருந்தினார்.

“முருகப்பெருமானே! நீர் எம் கனவில் வந்தீர்! உம்மைக் கடலில் காணலாம் என்று சொன்னீர். இப்போது உம்மைக் காணவில்லையே” - எனக் கவலையோடு கடலில் குதித்தார் வடமலையப்பப் பிள்ளை.
 
கடலில் முருகப்பெருமானைத் தேடினார். சிறிதுநேரத்தில் முருகப்பெருமான் விக்கிரகம் வடமலையப்பப் பிள்ளை கையில் கிடைத்தது. அந்த விக்கிரகத்தை படகில் ஏற்றி கரைக்குக் கொண்டு வந்தார்கள்.
பின்னர் 1653ஆம் ஆண்டு தை 29ஆம் தேதி முருகப்பெருமான் சிலைக்கு பிரதிஷ்டை செய்தார்கள்.

இந்த முருகப்பெருமானின் விக்கிரகம்தான் ‘சண்முகர்’ என அழைக்கப்படுகிறது.

கடலில் சிலகாலம் இந்த விக்கிரகம் இருந்ததால் சண்முகரின் முகத்தில் கடல்நீர் அரித்துவிட்டதாக ஆன்மீக அன்பர்கள் கூறுவார்கள். கடல்நீர் அரித்த நிலையை இன்றும் சண்முகரின் முகத்தில் காணலாம்.

3. லூஷிங்டன் துரை
ஒருமுறை ஆங்கிலேய கலெக்டராக திருநெல்வேலியில் பணிபுரிந்த லூஷிங்டன் துரை திருச்செந்தூருக்கு வந்தார். அப்போது வசந்த மண்டபத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி இருந்தார். பக்தர்கள் அருகிலிருந்து முருகப்பெருமானுக்கு விசிறிக் கொண்டு இருந்தார்கள்.

இதைப்பார்த்த லூஷிங்டன் துரை, “உங்கள் கடவுளுக்கு வியர்வை உண்டாகிறதோ” எனக், கேலி செய்து சிரித்தார். இதைக் கவனித்த பக்தர்கள் ஆமாம் என்கிறார்கள். பின்னர் லூஷிங்டன் துரைக்கு முருகப் பெருமானின் சிறப்பை உணர்த்தும் விதத்தில் முருகப் பெருமானின் மேலிருந்த மாலைகளை எடுத்து ஒரு புதிய துணியை முருகப் பெருமானின்மேல் போர்த்தினார்கள். கொஞ்சநேரத்தில் முருகப்பெருமான்மீது வியர்வை உருவாகி அந்த துணி முழுவதும் நனைந்தது. வியர்வை அதிகமாகி அது தரையிலும் ஓட ஆரம்பித்தது.
    
கோவிலுக்கு வெள்ளிப் பாத்திரங்களை காணிக்கை செலுத்தியதாக புராணம் குறிப்பிடுகிறது.

4. ஆதிசங்கரர்

ஆதிசங்கரர் தீராத காச நோயால் அல்லல்பட்டார். திருக்கோகரணத்தில் கடவுளை வழிபடும்போது, “நீர், திருச்செந்தூர் சென்று வழிபட்டால் உமது நோய் தீரும் என சிவபெருமான் உணர்த்தினார். பின்னர் திருச்செந்தூர்வந்து முருகப்பெருமான் ஆலயத்தில் வழிபட்டார்.

ஆதிசங்கரரின் காச நோய் நீங்கியது. பின்னர் சுப்பிரமணிய புஜங்கம் என்னும் பாமாலையை வடமொழியில் இயற்றினார்.

தொடரும்.

Post a Comment

புதியது பழையவை