திருச்செந்தூர் முருகன் - மாசித் திருவிழா 2019 - நெல்லை கவிநேசன் சிறப்பு கட்டுரைத்தொடர் 3




திருச்செந்தூர் முருகன் மாசித் திருவிழா - 2019 
நெல்லை கவிநேசன் - சிறப்பு கட்டுரைத்தொடர்
 [Website:www.nellaikavinesan.com, Email: nellaikavinesan25@gmail.com]

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற மாசித் திருவிழா மூன்றாம் நாள் நிகழ்வுகள்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா 10.02.2019 முதல் 21.02.2019வரை 12 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்மாசி திருநாள் 3ம் திருவிழாவான [12.02.2019] இன்று சுவாமி, அம்பாள் சப்பரங்கள்பின்பு விநாயகர்,சரஸ்வதி தோத்திரப் பாராயணம் பாடிபோது. 




இதனை முன்னிட்டு “திருச்செந்தூர் முருகன்” என்னும் தலைப்பில் நெல்லை கவிநேசன் வழங்கும் சிறப்பு கட்டுரைத்தொடர் வெளியிடப்படுகிறது.  

இரண்டாம் படைவீடு : திருச்செந்தூர் (திருச்சீரலைவாய்)  

திருநெல்வேலியிலிருந்து சுமார் 58 கி.மீ, கிழக்கிலும் தூத்துக்குடியிலிருந்து சுமார் 40 கி.மீ.தெற்கிலும் அமைந்துள்ளது திருச்செந்தூர் ஆகும். வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ள இத்திருத்தலம் கடல் அலைகள் தவழும் சிறப்பைக் கொண்டதால் ‘அலைவாய்’ என்று அழைக்கப்படுகிறது.
 
முருகப்பெருமான் சூரபத்மன் மீது படையெடுத்தார். வருகின்ற வழியில் நின்ற தாரகாசூரனையும் அவனுக்குப் பக்கபலமாக நின்ற கிரவுஞ்சமலையையும் அழித்தார். பின்னர் திருச்செந்தூர் வந்து தேவதட்சனால் அமைக்கப்பட்ட கோவிலில் தங்கி தேவ குருவாகிய வியாழ பகவானால் பூஜிக்கப்பெற்று அசுரர்களின் வரலாற்றைக் கேட்டறிந்தார் எனக் கந்தபுராணம் குறிப்பிடுகிறது. வியாழ பகவானால் பூஜிக்கப்பட்டமையால் திருச்செந்தூர் வியாழ சேத்திரமாகவும் கருதப்படுகிறது. இங்குதான் முருகப்பெருமான் தேவர்களுக்கு மீண்டும் மீண்டும் தொல்லை கொடுத்த சூரபத்மனைப் போரிட்டு வெற்றி கொண்டார்.

வழிபடும் முறை

சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் வழிபட விரும்பும் பக்தர்கள் முதலில் நாழிக்கிணறு சென்று நீராட வேண்டும். பின்னர் ஈரமான துணியோடு அருகிலுள்ள கடலில் சென்று குளிக்க வேண்டும்.
 
சப்த நதிகளும் சங்கமம் ஆகும் இடம் கடல் என்பதால் அங்கு நீராடிய பின்பு வேறு எந்தத் தீர்த்தத்திலும் நீராடுவதைத் தவிர்ப்பதே சிறந்தது ஆகும். கடலில் நீராடிய பின்பு தூண்டுகை விநாயகரைத் தரிசிக்க வேண்டும்.

பின்னர் கிரிவீதி வழியாக வலம்வந்து கோவிலின் தெற்குப் பகுதியிலுள்ள சண்முக விலாசம் வழியாக கோவில் உள்ளே செல்ல வேண்டும். அப்போது ஆண்கள் தங்கள் மேலாடைகளைக் கழற்றிக் கொண்டு படிக்கட்டு வழியாக கீழ்இறங்கி சீபலி மண்டபம் எனப்படும் வெளிப்பிரகாரத்தைச் சுற்றி வலம்வர வேண்டும்.
 
சீபலி மண்டபத்தில் படி இறங்கியவுடன் மேற்குப்பக்கம் திரும்பி சித்தி விநாயகரை வழிபட்டு, பின் நடுப்பிரகாரம் வழியாக வலம்வர வேண்டும். அதன்பின்னர் தெற்கு நுழைவாயில் வழியாக மகா மண்டபம் சென்று மூலவராகிய பாலசுப்பிரமணியரைத் தரிசிக்க வேண்டும். அதன்பின்னர் சண்முகரை வணங்க வேண்டும். சண்முகரை வணங்கிய பின்னர் கொடி மரத்தில் விழுந்து வணங்க வேண்டும்.
 
பிறகு தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும். தொடர்ந்து வள்ளி, தெய்வானையை வணங்க வேண்டும். வள்ளி தெய்வானையை வணங்கியபின்பு சண்டிகேஸ்வரரை வணங்கலாம். பின்னர் நடராஜரைத் தரிசனம் செய்ய வேண்டும். பின்பு சனீஸ்வரரை மற்றும் பைரவரை வழிபடலாம்.
 
அதன்பின்னர் கோவிலுக்கு வெளியே வந்து சண்முக விலாசம் மண்டபத்தினருகே சிறிதுநேரம் அமர்ந்து வழிபாட்டை முடித்துக் கொள்ளலாம். 


தொடரும்.

Post a Comment

புதியது பழையவை