அனுபவம் பேசுகிறது - 1
பேட்ட - விஸ்வாசம்
-நெல்லை கவிநேசன்
nellaikavinesan25@gmail.com
nellaikavinesan.com
nellaikavinesan25@gmail.com
nellaikavinesan.com
எப்போதுமே நமது தகவல் தொடர்பில் புரிந்துகொள்ளுதல் (Understanding) என்பது மிக முக்கியமானது. நமது எண்ணம் பேச்சாக உருமாறுகிறது. சிலவேளைகளில் கவிதை, கட்டுரை, கதை, கடிதம் என எழுத்தின் வெவ்வேறு வடிவங்களாகிறது. இப்படி உருமாற்றம்தரும் எண்ணங்கள் நமது தகவலைப் பெறுபவருக்கு சரியான புரிதலை ஏற்படுத்தாவிட்டால், பலநேரங்களில் குழப்பங்கள் ஏற்படுகின்றன. மனவருத்தங்கள் அரங்கேறுகின்றன. தகராறுகள் தலைதூக்குகின்றன.
சமீபத்தில், தொழில் முனைவோருக்கான (Entrepreneurship) பயிற்சி வகுப்பை நடத்திக்கொண்டிருந்தேன்.
அப்போது, “தொழிலைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்துவதற்குத் தேவையான இரண்டு முக்கிய விஷயங்கள் உள்ளன. அவைதான் - பேட்ட மற்றும் விசுவாசம்” என்றேன்.
பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டவர்கள் சிரித்தார்கள்.
மாணவர்களின் புரிந்துகொள்ளும் திறனை அறிந்துகொள்வதற்காக “பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய இந்த இரண்டையும்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”என்று ஒரு கேள்வியைக் கேட்டேன்.
எனது கேள்விக்கு அவர்கள் விதவிதமான பதில்களைத் தந்தார்கள்.
“சூப்பர் ஸ்டார் நடித்த படம் பேட்ட” - என்று சொல்லிவிட்டு என்னை வித்தியாசமாகப் பார்த்தார் ஒரு இளைஞர்.
‘இவருக்கு இதுகூட தெரியவில்லையே’ என்று எண்ணி, பொங்கிவந்த தனது சிரிப்பை அடக்கிக்கொண்டார்.
“தல நடிச்ச படம்தான் சார் விஸ்வாசம்” என்று இன்னொருவர் சொல்லிவிட்டு, அந்த பயிற்சி அரங்கில் சிரிப்பலையை கிளப்ப முயற்சிகளை மேற்கொண்டார்.
பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டவர்கள், வெவ்வேறு விதமாக தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தார்கள்.
அவர்கள் கருத்தை ரசித்தேன்.
பின்னர், “பேட்ட-விஸ்வாசம் ஆகிய இரண்டுக்கும் என்ன அர்த்தம்?” என்று கேட்டேன்.
‘நீங்கள் கேட்பது அர்த்தமற்ற கேள்வி’ என்று அவர்கள் பார்வைமூலம் எனக்கு உணர்த்தினார்கள்.
பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டவர்களால் இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் சரியான அர்த்தங்களை தர இயலவில்லை.
“பேட்ட என்பது ‘பேட்டை’ என்னும் சொல்லின் திரிபு ஆகும். ‘பேட்டை’ என்பதற்கு ‘தொழிற்கூடங்களின் தொகுப்பு’ என்றுகூட அர்த்தம் கொள்ளலாம். அதாவது- “தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி” என்றும் குறிப்பிடுவார்கள். இதனால்தான், வண்ணார்பேட்டை, ஜாபர்கான் பேட்டை, ராணி பேட்டை, நாமகிரி பேட்டை என்று பல ஊர்கள்கூட பேட்டை என்னும் பெயரை தன்னோடு இணைத்துக்கொண்டுள்ளது. அரசின்மூலம் பல தொழிற்பேட்டைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த தொழிற்பேட்டை ‘Industrial Estate’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது” - என்பது எனது விளக்கமாக அமைந்தது.
பயிற்சியில் கலந்துகொண்டவர்கள் சற்று அதிக கவனத்தோடு என்னை உற்று நோக்கினார்கள்.
“சார் விஸ்வாசத்துக்கும், தொழிலுக்கும் என்ன சார் தொடர்பு?” என்றார் இன்னொருவர்.
“‘கர்த்தருக்குள் விசுவாசமாக இருங்கள்’ - என்ற பிரபல வசனத்தை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?. இப்போது ‘விஸ்வாசம்’ என்பதற்கு எளிதாக உங்களுக்கு அர்த்தம் புரியும். விஸ்வாசம் என்பது நம்பிக்கை, அன்பு, பாசம், உண்மை, அக்கறை என பல்வேறு அர்த்தங்களை கொண்டுள்ளதாக திகழ்கிறது. மொத்தத்தில் ஒரு தொழில் வெற்றிக்கு இந்த விசுவாசம் மிகவும் முக்கியமானது. இதனை புரிந்துகொண்டால், எந்தத் தொழிலிலும் எளிதில் வெற்றி பெறலாம்” - என்ற எனது விளக்கம் பயிற்சியில் கலந்துகொண்டவர்களுக்கு புதிதாக இருந்தது.
எந்த வார்த்தைக்கும் நேரடி அர்த்தங்களைப் புரிந்துகொள்வதைவிட, மறைமுகமாய் நமக்கு தெரியும் அர்த்தங்களையும் சரியாகப் புரிந்துகொள்வது நல்லது. இதன்மூலம், தகவல்களின் உண்மைநிலையை எளிதில் உணர்ந்துகொள்ளலாம். சிறப்பான தகவல் தொடர்பையும் (Communication) ஏற்படுத்திக்கொள்ள இயலும்.
கருத்துரையிடுக