எல்லோரும் நண்பர்களா...? -நெல்லை கவிநேசன்
Email: nellaikavinesan25@gmail.com
Website: nellaikavinesan.com
Website: nellaikavinesan.com
வாழ்க்கையில் நாள்தோறும் நாம் பலரை சந்திக்கிறோம். பலரோடு தொடர்புகொள்கிறோம். பலவித உறவுகளை வளர்த்துக்கொள்கிறோம். விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இணைந்து பழகி, சேர்ந்து வாழ்கின்ற நிலை நம் வாழ்க்கையில் தவிர்க்க இயலாத ஒன்றாக அமைந்துவிடுகிறது.
“நம்மிடம் பழகியவர்கள் அனைவரையும் நண்பர்களாக ஏற்றுக்கொள்ளலாமா?” என்ற கேள்வி இப்போது எழுகிறது. நன்றாக சிரித்துப் பேசுபவர்களையெல்லாம் நண்பர்களாக ஏற்றுக்கொள்ள முடியாது. இதேபோல், நம்மோடு சிரித்துப் பேசாதவர்களையும் ‘நண்பர்கள் அல்ல’ என்று ஒதுக்கிவிட முடியாது. இந்தநிலையில், ‘எது நட்பு?’, ‘யார் நண்பர்கள்?’ என்பதை தெளிவாகப் புரிந்துகொண்டால், வாழ்க்கையில் வெற்றிக் கனியைப் பறிக்கலாம்.
வாழ்க்கையில் ‘வெற்றி’ என்பது நல்ல நண்பர்களின் கூட்டணியால் உருவாக்கப்படுகிறது. “நண்பர்களின் அரவணைப்பு” மிகச்சிறந்த பொறுமையையும், அமைதியையும், தெளிவான வாழ்க்கை பாதையையும் ஒருவருக்கு வழங்குகிறது. ஆனால், அதேவேளையில் நல்ல நட்பை தேர்ந்தெடுப்பதில் தடுமாறுபவர்களின் வாழ்க்கையில் “தலைகீழ் மாற்றங்கள்” உருவாகிவிடுகிறது. அவர்கள் அதிகமான பிரச்சினைகளிலும் சிக்கிக்கொள்கிறார்கள்.
நல்ல நட்புக்கு அடிப்படைத் தேவை “நம்பிக்கை” என்பார்கள். “இவர் எனது வளர்ச்சிக்கு கண்டிப்பாக உதவுவார்” என்ற நம்பிக்கையில்தான் இரண்டு மனிதர்கள் நண்பர்களாகிறார்கள். இந்த நம்பிக்கையில் “சிறு நூல் அளவு விரிசல்” ஏற்பட்டாலும், ‘நட்பு பாலம்’ உடைந்துவிடும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நட்பை பேணிப் பாதுகாக்கும்போதுதான், அந்த நட்பு சிறந்த நட்பாக மாறுகிறது.
மனிதனா? குரங்கா?
அது ஒரு பெரிய காடு.
அந்தக் காட்டில் பல கொடிய வன விலங்குகள் வாழ்ந்து வந்தன.
ஒருநாள் அந்த அடர்ந்த காட்டுக்குள் ஒரு மனிதர் சென்றுவிட்டார். அந்த மனிதரைப் பார்த்த காட்டு விலங்குகள் ஒவ்வொன்றும் பலவிதங்களில் அவரைப் பயமுறுத்தின.
அப்போது- ஒரு புலி அந்த மனிதரை விரட்டத் தொடங்கியது. புலியைப் பார்த்த அந்த மனிதர் வேகமாக ஓடத் தொடங்கினார். புலி விடாமல் அவரைத் துரத்தியது. “புலியிடமிருந்து எப்படியாவது தப்பித்துவிட வேண்டும்” என்று எண்ணிய மனிதர் அருகில் இருந்த ஒரு மரத்தின்மீது மிக வேகமாக ஏறினார்.
சிறிது நேரத்தில் - மரத்தின் உச்சியை அடைந்துவிட்டார். மரத்தின் உச்சிக்குச் சென்றதும், மிகப்பெரிய அதிர்ச்சி அவருக்குக் காத்திருந்தது. மரத்தின் உச்சியில் பெரிய மனித குரங்கு ஒன்று அமர்ந்திருந்தது. பயந்து நடுங்கினார் அந்த மனிதர்.
“என்னை ஒரு புலி துரத்துகிறது. அதற்குப் பயந்துதான் நான் இந்த மரத்தில் ஏறினேன். என்னை ஒன்றும் செய்துவிடாதே. நீ எனக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என்று குரங்கிடம் கெஞ்சினார் அந்த மனிதர்.
“மனிதா... நீ என்னைத் தேடி வந்துவிட்டாய். உனக்குப் பாதுகாப்பாக நான் இருப்பேன். நீ கவலைப்படாதே” என்றது அந்த மனிதக் குரங்கு.
இரவு நேரம் வந்தது.
மரத்தின் அடியில் புலி காத்திருந்தது.
“எப்படியும் இந்த மனிதன் கீழே வராமலா போய்விடுவான்?” என்று எண்ணி, நம்பிக்கையோடு இருந்தது. ஆனால், இரவு வெகுநேரம் ஆனபின்பும், அந்த மனிதர் கீழே இறங்கவே இல்லை. குரங்கும், அந்த மனிதரும் ஒரு உடன்படிக்கை செய்துகொண்டார்கள்.
“குரங்கு தூங்கும்போது மனிதர் விழித்திருக்கவும், மனிதர் தூங்கும்போது குரங்கு விழித்திருக்கவும் வேண்டும்” எனவும் உடன்படிக்கை செய்துகொண்டார்கள்.
இரவு நேரத்தில் முதலில் அந்த மனிதர் தூங்க ஆரம்பித்தார். அப்போது, மனிதக் குரங்கு அவரைக் காவல் காத்தது. பின்னர், அந்த மனிதக் குரங்கு தூங்க ஆரம்பித்தது. இப்போது மனிதர் அந்தக் குரங்கை காவல் காத்தார்.
இந்தவேளையில், புலி தனது பசியைத் தீர்த்துக்கொள்ள ஒரு தந்திரம் செய்தது. “மனிதரையும், குரங்கையும் பிரித்துவிட்டு குறுக்கு வழியில் என் பசியைப் போக்க வேண்டும்” என புலி எண்ணியது. மெதுவாக மனிதனைப் பார்த்து அந்தப் புலி பேச ஆரம்பித்தது.
“மனிதா... நான் உன்னை விட்டுவிடுகிறேன். எனக்கு இப்போது பசி அதிகமாகிவிட்டது. உன் அருகிலிருக்கும் மனிதக் குரங்கு தூங்கிக் கொண்டிருக்கிறது. அதனை நீ கீழே தள்ளிவிடு. உன்னை நான் விட்டுவிடுகிறேன்” - என புலி சொன்னது.
மனித மனமும் ஒரு குரங்குதானே?. எனவே, அந்த மனிதர் குரங்கின் மனதைவிட மிகவும் கீழ்த்தரமாக சிந்திக்க ஆரம்பித்தார்.
“உயிரோடு வாழ வேண்டும்” என்ற எண்ணம் அவருக்குள் மேலோங்கியது. இதனால், கிளையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த குரங்கை கீழே தள்ளிவிட்டுவிட்டார். “இந்த மனிதன் இப்படிச் செய்துவிட்டானே” என்று கீழே விழுந்த குரங்கு கவலைப்பட்டது.
அப்போது, மிக வேகமாக குரங்கை நோக்கி புலி ஓடி வந்தது. “நீ பயப்படாதே. உன்னை நான் ஒன்றும் செய்யமாட்டேன். எனக்கு அந்த மனிதரின் மாமிசம்தான் வேண்டும். இந்த மனிதன் எவ்வளவு கீழ்த்தரமான புத்தியோடு இருக்கிறான் என்பதை நீ தெரிந்து கொள்வதற்காகத்தான் உன்னை கீழே தள்ளிவிடுமாறு அந்த மனிதரிடம் சொன்னேன்” - என்றது புலி.
குரங்கு பயந்துபோனது. “நீ பயப்படாதே உன்னை நான் விட்டுவிடுகிறேன். ஆனால், நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். மரத்தில் ஏறி உச்சிக்குச் சென்று உன்னை கீழே தள்ளிய, நம்பிக்கைத் துரோகியான அந்த மனிதனை நீ கீழே தள்ளிவிடு. நான் அவனை கொன்று தின்றுவிடுகிறேன்” என்றது புலி.
“நீங்கள் சொல்வதுபோலவே கண்டிப்பாகச் செய்வேன். என்னை விட்டுவிடுங்கள்” என்று புலியிடம் சொல்லிவிட்டு மரத்தின் உச்சிக்குச் சென்ற குரங்கு, வேகமாக அந்த மனிதரிடம் வந்தது.
“இந்தக் குரங்கு என்னை கீழே தள்ளிவிட்டுவிட்டால், என் உயிர் போய்விடுமே” என பயந்து நடுங்கினார் அந்த மனிதர்.
“மனிதா... நீ பயப்பட வேண்டிய அவசியமில்லை. என்னை நம்பி அடைக்கலம் கேட்டு நீ வந்தாய். உன் நம்பிக்கைக்கு நான் துரோகம் செய்யமாட்டேன். புலியிடமிருந்து உன்னைக் காப்பேன். புலியின் பிடியிலிருந்து நான் தப்பித்துக்கொள்ளவே உன்னை மரத்திலிருந்து கீழே தள்ளிவிடுவதற்கு சம்மதித்தேன். நீ எந்தவித கவலையும் இல்லாமல் இருக்கலாம்” என்றுசொல்லி சிரித்தது அந்த குரங்கு.
இந்த நிகழ்வு - “குரங்கிடம் இருக்கும் ‘நல்ல மனம்’ மனிதரிடம் இல்லை” என்பதை சுட்டிக்காட்டுகிறது. நட்பை எதிர்பார்த்து ‘நட்புணர்வோடு’ நம்மிடம் பழகியவர்களிடம், நாம் உண்மையோடு நட்பு பாராட்ட வேண்டும் என்ற நல்ல தகவலையும் இது விளக்குகிறது.
பாசாங்கு நண்பர்கள்
உயிர்போகும் நிலை வந்தால்கூட, பாசமுள்ள நட்பு மாறாத தன்மை கொண்டது. வாழ்க்கையில் வெற்றி பெற விரும்புபவர்கள் நல்ல நட்பைத் தேர்ந்தெடுத்து உண்மையுள்ள நண்பராக தங்களை தயார்படுத்திக் கொள்வது இன்றைய காலகட்டத்தின் அவசியத் தேவையாகும்.
இதனால்தான் திருவள்ளுவர்,
“முகம்நக நட்பது நட்பன்று; நெஞ்சத்து
அகம்நக நட்பது நட்பு” - என்று குறிப்பிடுவார்.
“முகம்நக நட்பது நட்பன்று; நெஞ்சத்து
அகம்நக நட்பது நட்பு” - என்று குறிப்பிடுவார்.
“புன்முறுவல் காட்டி, சிரித்து மகிழ்வதுபோல, பாசாங்கு செய்து நண்பர்களாய் இருப்பது, உண்மையான நட்பு அல்ல. நண்பர்கள் இருவரது மனங்களும் உண்மையிலேயே மகிழும்படி நட்பு கொள்வதுதான் உண்மையான நட்பு” - என்பது திருவள்ளுவர் நமக்குக் காட்டும் “வழிகாட்டல்” ஆகும்.
நல்ல நண்பர்கள்
நண்பர்களை நினைத்த நேரத்தில் உடனே உருவாக்கிவிட முடியாது. இதேபோல், நல்ல நண்பர்களை தேர்ந்தெடுப்பதற்கும் பழகிக்கொள்வது நல்லது. நல்ல நண்பர்களைப் பெற விரும்புபவர்கள், முதலில் தாங்கள் நல்லவர்களாக இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும். மற்றவர்கள்மீது நம்பிக்கை வைக்கும் சிறந்த குணத்தையும் பெற்றிருக்க வேண்டும்.
நண்பர்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும் காலங்களில் “எனக்கென்ன?” என ஒதுங்கிவிடாமல், அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளையும் கண்டறிய வேண்டும். ஏதேனும் தவறு செய்துவிட்டால், “என்னை மன்னித்துவிடு நண்பா” என்று மன்னிப்பு கேட்பதற்கும் தயக்கம் காட்டாமல் இருக்க வேண்டும்.
“எல்லோரையும் நண்பர்களாக மாற்ற வேண்டும்” என்ற முயற்சியில் ஈடுபடுவது நல்லதுதான். ஆனால், தரம் இல்லாத நபர்களை நண்பர்களாக மாற்ற முயற்சி செய்வது, தண்ணீர் இல்லாத கிணற்றில் தலைகீழாய் குதிப்பதற்குச் சமமாகும்.
நண்பர்களோடு அறிவுப் பூர்வமாக விவாதிப்பதும், அவசியமான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதும், நல்ல தகவல்களால் மகிழ்வதும் ஆரோக்கியமான நட்புக்கு வழிவகுக்கும்.
நண்பர்களோடு சேர்ந்து ஊர் சுற்றுவதும், அடிக்கடி சினிமா பார்ப்பதும், வீணாக நேரம் கழிப்பதும் நட்பில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், பலநேரங்களில் நேரத்தையும், பணத்தையும் வீணடிக்கும் செயலாகவே மாறிவிடும்.
இதனால், “நண்பர்களோடு இருப்பதும், பழகுவதும், இந்த நேரத்தில் எனக்குத் தேவைதானா?” என்ற கேள்வியை நண்பர்களைச் சந்திக்கும்போதெல்லாம் மனதிற்குள் கேட்டு, முடிவெடுப்பது விவேகமான நட்புக்கு வழிவகுக்கும்.
எந்தச் சூழலிலும், நேர்மைக்கும், வளர்ச்சிக்கும், மகிழ்ச்சிக்கும் துணை நிற்காத நட்பை விலக்கி வைத்துவிடுவது நல்லது. அப்போதுதான், மனநிறைவான நட்பை உருவாக்கி, நல்ல நண்பர்களைப் பெற்று, வாழ்க்கையில் வெற்றி பெற இயலும்.
கருத்துரையிடுக