வாருங்கள் தொழில் தொடங்குவோம்


புத்தகத்தைப்பற்றி…

பேராசிரியர் நெல்லை கவிநேசன் எம்.பி.ஏ.,(எஸ்.நாராயணராஜன்) எழுதியிருக்கும் அருமையான நூல் “வாருங்கள் தொழில் தொடங்குவோம்”.

இப்பொழுது தொழில்முனைவோர்களாக மாற வேண்டுமென்ற ஆர்வத்தை ஊட்டி வளர்க்க அரசு முயல்கின்றது. பொதுத்துறைகளில் வேலைவாய்ப்பு குறைந்து வருவதால், தனியார் துறையில் வேலைவாய்ப்பைத் தேடவேண்டிய நிலையில் இளைஞர்கள் இருக்கின்றனர். போட்டி உலகில், வேலைதேடும் முயற்சியில் ஒரு தொழிலைத் தொடங்கி நடத்தலாமென்ற முடிவுக்குப் பல இளைஞர்கள் வருகின்றனர். தொழிலைத் தொடங்கி நடத்த, வழிகாட்ட பல நூல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், பெரும்பாலான நூல்களில் தலைப்புகள் மட்டும் கவர்ச்சியாக இருக்கும். உள்ளடக்கம் ஏமாற்றத்தைத் தரும். ஆனால், நெல்லை கவிநேசனின் “வாருங்கள் தொழில் தொடங்குவோம்” நூல் உண்மையிலேயே வழிகாட்டும் பயனுள்ள நூலாக இருக்கின்றது.

இந்நூலின் சிறப்புத் தன்மைகளுள் - முதலாவதாக, இது சரளமான எளிய, இனிய நடையில் படிக்கச் சுவையாக அமைந்திருக்கின்றது. இரண்டாவதாக, ஆசிரியர் கருத்தைக் கூறும்முறை பாராட்டத்தக்கது. சுற்றி வளைக்காமல் நேரிடையாகக் கூறுகின்றனர். எடுத்துக்காட்டுகளாக, ஆங்காங்கு நடைமுறையில் கண்டவற்றைக் கூறுவது கருத்துக்கு வலுவைத் தருகின்றது. மூன்றாவதாக, ஒரு தொழிலதிபராக மாற, வளர, வெற்றிபெற வேண்டிய எல்லா செய்திகளையும் இந்தநூலில் விவரமாக கூறியுள்ளார். நான்காவதாக, ஒரு தொழில்முனைவோருக்கு வேண்டிய செய்திகளை எல்லாம் முயன்று திரட்டி வழங்கியுள்ளார். ‘என்ன தொழில் தொடங்கலாம்?’ என்ற பகுதியில், தொழில்களை வகைப்படுத்தி 140 தொழில்களின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார். இதேபோன்ற தொழிலுக்கு உதவக்கூடிய நிறுவனங்கள், முகவரிகள் எல்லாவற்றையும் திரட்டி வழங்கியுள்ளார். ஐந்தாவதாக, தொழிலைத் தொடங்குபவர்களுக்கு மட்டுமின்றி, தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய பல விவரங்கள் இந்தநூலில் உள்ளன.

எழுத்தாளர் நெல்லை கவிநேசன் முறையாக வணிக நிர்வாக இயலைக் கற்றவர். சிறப்பாக மாணவர்கள் உள்ளங்கொள்கின்ற வகையில் நிர்வாக இயலைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருப்பவர். நீண்டகாலமாக புகழ்பெற்ற வாணிப, தொழில் இதழ்களில் தொடர்ந்து பயனுள்ள கட்டுரைகளைப் படைத்தளித்துக் கொண்டிருப்பவர். காலத்தின் தேவையை உணர்ந்து, வெறும் பொழுதுபோக்கிற்காக நூல் எழுதாமல், எண்ணற்ற் இளைஞர்களின் வாழ்க்கையில் ஒளிசேர்க்க நூல் எழுதியிருக்கும் ஆசிரியரைப் பாராட்டுகிறேன். இந்தநூல் தொழிலில் ஈடுபட விரும்புகின்ற ஒவ்வொருவரிடமும் இருக்கவேண்டிய நூல். இதிலுள்ள கருத்துகளைக் சரியாகப் புரிந்துகொண்டு, தகவல்களைத் தக்கமுறையில் பயன்படுத்தி, உள்ளத்தில் உறுதியோடு முயல்கின்றவர்கள் திட்டவட்டமாக தொழிலில் வெற்றி காண்பார்கள்.

(வாருங்கள் தொழில் தொடங்குவோம் நூல் மதிப்புரையில் பிரபல எழுத்தாளர், பேராசிரியர், டாக்டர்.மா.பா.குருசாமி அவர்கள்.)


விலை: ருபாய்.80/-

Post a Comment

புதியது பழையவை